கட்டுரை

விவசாய சட்டங்கள்

வசந்தன்

வேளாண்துறையில் மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு சட்டமாகிவிட்டன. இவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சட்டங்கள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் பேசினோம்:

விவசாயத்தில் அந்நிய நேரடி முதலீடு! - வைகைச்செல்வன், அதிமுக

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்துக்கொள்ள முடியும். இதுநாள்வரை இடைத்தரகர் தலையீட்டால் நிறைய நஷ்டங்களை விவசாயிகள் சந்தித்தனர்.

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் வியாபாரிக்கும் பயனளிக்கக்கூடிய திட்டமாக இந்த வேளாண் சட்டங்கள் உள்ளன. பெருநிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்போவதால் வேலைவாய்ப்பும் கட்டமைப்பும் உருவாகப்போகிறது. முதலீடு அதிகமாகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

தோட்டப்பயிர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு 12 மாதங்களிலும் சராசரி விலை அதிகரிக்கப்பட வேண்டும். தானியங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சராசரி விலை கூட வேண்டும். இதுதான் விவசாயத்தின் அடிப்படை விதி. இவ்வாறு விளைவிக்கப்படும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு இந்த சட்டத்திருத்தம் முழு சுதந்திரம் வழங்குகிறது. இதனால் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயத்திற்கு நேரடி அந்நிய முதலீடு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

உணவு விநியோக கட்டமைப்பில் சில நேரங்களில் குளிர்சாதனக் கிடங்கில் பொருட்களை பதுக்கிவைக்கும் வழக்கம் உள்ளது. வெங்காயம், தக்காளி போன்ற உணவு பொருட்களை பதுக்கிவைக்கும் சூழல் இருக்கிறது. வேளாண் சட்டத் திருத்தம் இந்த பதுக்கல் நடவடிக்கையை தடுக்கும். விலை ஏற்றம், தட்டுப்பாடு நேரும்போது யாரும் குறிப்பிட்ட உணவு பொருட்களை பதுக்கி வைக்க முடியாதபடி திருத்தங்களை மேற்கொள்ள இந்த சட்டங்கள் நெகிழ்வுத்தன்மையோடு வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வியாபாரம், வர்த்தகம் பெருகுகிறது. அடிப்படை ஆதார விலைக்கு இந்த சட்டத்தால் ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது. 

விவசாயிகள் முறையான போட்டி வணிகம் மூலம் லாபகரமான விலை பெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கெனவே உள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த வேளாண் விற்பனை மைய கட்டமைப்புகளையும் மேம்படுத்த இச்சட்டம் உதவும்.

விலையை விவசாயியே தீர்மானிப்பான் - எஸ்.ஆர்.சேகர், பாஜக

விவசாய மசோதாக்கள் குறித்து மக்களிடையே ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே இதுகுறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

எந்த தொழிலாக இருந்தாலும், அதன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்த பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்கிறது. லாபத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட பொருளின் விலையை அவர்களால் நிர்ணயம் செய்யமுடிகிறது. ஆனால் 70 ஆண்டுகால விவசாய துறையில் இது நிகழவே இல்லை. என்ன விலை கொடுக்கப்படுமென விளைவிப்பவனுக்கு தெரிந்ததேயில்லை. அதேபோல் யாரிடம் விற்கப்போகிறோம் என்கிற தேர்வையும்

விவசாயியால் செய்துகொள்ள முடியாது. மாநிலங்களை கடந்து விளைபொருட்களின் விற்பனையை நடத்தமுடியாது. முதன்முறையாக விவசாயி தான் விரும்பும் விலைக்கு விற்கமுடியும், தேவையென்றால் மாநிலத்தை கடந்தும் விற்பனை செய்துக்கொள்ள முடியும் என்கிற வாய்ப்பை விவசாய சட்டங்கள் அளிக்கும்.

விவசாய உற்பத்தி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கி ஏதுவான இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துகொள்ள முடியும். இதற்கு ஆதார விலை என்கிற முறையே வேண்டியதில்லை. ஏனென்றால், உற்பத்தி பொருளுக்கு உரிய விலை வழங்கப்படாத நிலையில்தான் குறைந்தபட்ச ஆதாரவிலை என்கிற முறை தேவைப்பட்டது. ஆனால், இங்குதான் தனக்கான விலையை விவசாயியே தீர்மானித்துக் கொள்கிறானே! அப்போது ஏன் ஆதார விலையை பற்றி பேசவேண்டும்?

விளைவிப்பவருக்கும் நுகர்வோருக்கு இடையில் யாருமே இருக்கக்கூடாது என்பதுதான் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயச் சட்டத்தின் பிரதான இலக்கு. இச்சட்டத்தின் பலன்களை உணர்ந்துகொள்ளும்போது விவசாயிகள் இதனை முழுவதுமாக ஏற்பார்கள்.

இடைத்தரகர்களின் இடத்தை கார்ப்பரேட் நிறுவனமே நிரப்பிவிடும் - அ.சரவணன், திமுக

வேளாண் சட்டத்திருத்தத்தில் குறைந்தபட்ச ஆதார விலை என்கிற அம்சமே இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுவதற்கான எந்த உத்தரவாதமும் இந்த சட்டத்தில் இல்லை. இது வருங்காலங்களில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக எழக்கூடும். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ‘‘இல்லை நாங்கள் உரிய ஆதாரவிலையை கொடுப்போமென'' பிரதமர் கூறுகிறார். இங்கு சட்டத்தில் இருப்பதை நடைமுறைப்படுத்துவதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் சட்டத்தில் இல்லாததை செய்வோமென பிரதமர் நரேந்திர மோடி கூறுவதை எப்படி ஏற்பது? இதற்கு முன்னரும் இதுபோல் பல்வேறு வாக்குறுதிகள் மக்களிடம் அள்ளிவீசப்பட்டிருக்கின்றன. அதில் எதனை முழுதாக நிறைவேற்றியிருக்கிறார்கள்?

விவசாயத் துறையானது முற்றிலும் மாநிலப் பட்டியலில் இருந்த ஒன்று. அதனை இப்போது முழுவதுமாக கைப்பற்றும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

அதேபோல் இந்த சட்டங்களின் மூலம் இடைத் தரகர்கள் ஆதிக்கத்தை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். அதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. இடைத்தரகர்களின் இடத்தை கார்ப்பரேட் நிறுவனமே நிரப்பிவிடும். விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதல் மற்றும் வணிகத்தில் பெருநிறுவனங்களின் பங்களிப்பானது 300 ஏக்கர்கள், 500 ஏக்கர்கள் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் சாதகமாக இருக்கலாம். வெறும் அரை ஏக்கர் ஒரு ஏக்கரில் குறைந்தளவு பயிரிட்டு வாழ்வை நகர்த்தும் ஏழை விவசாயி எப்படி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து வணிகம் செய்ய முடியும்?

இடைத்தரகர்கள் பிரச்சினைக்கு உழவர் சந்தை மூலமே திமுக ஆட்சியில் தீர்வுகாணப்பட்டது.

விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபடவும், நியாயமான விலையில் பொதுமக்கள் நுகரவும் உழவர் சந்தை வழிவகுத்தது. இன்றைக்கு விவசாய வணிகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் கிடைக்குமென சொல்லப்படும் நன்மைகளை உழவர் சந்தையே அன்று சாத்தியமாக்கியது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் உழவர் சந்தைகளை செயல்படாமல் செய்தனர். இப்போது அதே அதிமுக அரசு தான் பெரும்முதலாளிகளுக்கான விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது. வேலைவாய்ப்பு, அந்நிய முதலீடு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. விவசாயிகளையும் வேளாண்மையையும் அழித்து ஏற்படுத்தும் வேலைவாய்ப்பே நமக்கு வேண்டாம்.

அக்டோபர், 2020.